ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹுருட்புரா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 நபர்களை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அப்போது, அந்த 3 பேரும் பயங்கரவாதிகள் என்பதும் அவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 3 பயங்கரவாதிகளையும் கைது செய்த பாதுகாப்பு படையினர் அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றினர்.