நடந்த முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்றாமல் படுதோல்வியைச் சந்தித்தது. இதன் விளைவாக மீண்டும் அ.தி.மு.க-வில் கழக நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று ஒரு அந்தக் கட்சியில் ஒரு தரப்பினர் சமீப நாள்களாக வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். அண்மையில் கூட ஓ.பி.எஸ் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் சேர்த்தாலே எல்லா பிரச்னையும் முடிந்துவிடும் என்று அ.தி.மு.க தேனி மாவட்ட செயலாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்-ன் சகோதரரும், தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ. ராஜா உட்பட பலர் சசிகலாவை நேற்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, ஓ.ராஜா உட்பட நான்கு பேரை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதாக அ.தி.மு.க தலைமை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துடன் வெளிவந்த இந்த அறிக்கையில், “கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கம் விளைவித்ததாக ஓ. ராஜா உட்பட 4 பேர் இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றனர். கழக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சசிகலாவை நேரில் சந்தித்ததன் காரணமாக சொந்த தம்பியையே ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கிய சம்பவம் அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.