தேனி மாவட்டம், பன்னீர்செல்வத்தின் கைலாசபுரம் இல்லத்தில், கடந்த புதன் கிழமை நடந்த திட்டமிடப்படாத கூட்டத்தில், பிரிந்து சென்ற சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவின் தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி இருந்தனர். நிர்வாகிகளின் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஓபிஎஸ் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்டச் செயலாளர் சையத் கான், கட்சியின் பல்வேறு பிரிவுகளை மீண்டும் இணைப்பதற்கான கூட்டத்தில் 200 நிர்வாகிகள் கலந்துகொண்டதாகக் கூறினார். “நாம் பிளவுபட்டதால்தான் எதிரிகள் மேலெழுந்தார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம். இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. ஆனால் மீண்டும் ஒன்றிணைந்ததன் மூலம் அவர்களை தோற்கடித்தோம்” என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். அம்மா மறைவுக்குப் பிறகு சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன, இப்போது கட்சியை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம் கட்சியின் நலனுக்காக தானும் பல துன்பங்களை அனுபவித்ததால், அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஓபிஎஸ் உறுதியளித்தார் என்று சையத் கான் கூறியிருந்தார்.
இப்படி இருக்க, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தொடர்பில் இருந்த அவருக்கு’ தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் வழியெங்கும் அதிமுக கொடிகளை ஏந்தி ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் ஒருபகுதியாக’ அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்தார்.
சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ராஜா, சமீபத்தில் அவரது மருமகன் டிடிவி தினகரனின் குடும்பத் திருமணத்தில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓ. ராஜா உள்பட நான்கு கட்சி நிர்வாகிகள், அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக’ அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ராஜாவின் சகோதரருமான ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/XChC2KxGmf
— AIADMK (@AIADMKOfficial) March 5, 2022
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/rBhHeDLkAa
— AIADMK (@AIADMKOfficial) March 5, 2022
மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கேட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்ததற்காக தேனி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் 33 பேர் நீக்கப்பட்டனர். 33 உறுப்பினர்களும் கட்சிப் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதிமுக தனது 5 தசாப்த கால ஆட்சியில் இவ்வளவு தேர்தல் தோல்விகளை சந்தித்ததில்லை என்றும், கட்சியை வலுப்படுத்த ஒற்றுமையாக இருக்க தலைவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் சசிகலா சமீபத்தில் கூறியிருந்தார். “கட்சி என் குடும்பம். குழந்தைகளை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“