பெய்ஜிங்: சீனா அரசு நடப்பு ஆண்டிற்கான ராணுவ செலவினங்களுக்காக கடந்த ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகமாக, 230 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.
அது குறித்து சீன அரசின் நாளிதழனான ’சைனா டெய்லி’யில் வெளியான தகவலில், ’சீன அரசு தனது நாட்டின் ராணுவ பட்ஜெட்டை இன்று முன்மொழிந்தது. சீன நாடாளுமன்றத்தில், தேசிய மக்கள் காங்கிரஸில் அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங் ராணுவ பட்ஜெட்டினைத் தாக்கல் செய்தார். ராணுவ செலவினங்களுக்காக சீன அரசு இந்த ஆண்டு 1.45 யூன் (230 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சீனா ராணுவத்திற்கென 6.8 சதவீதம் கூடுதலாக, 209 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்திருந்தது. இதனால் அந்நாட்டின் ராணுவ பட்ஜெட் முதல் முறையாக 200 பில்லியன் டாலரை கடந்தது.
சீன நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் லீ, ”மக்கள் விடுதலை ராணுவத்தினர் விரிவான போர் ஆயத்த நிலைக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை பாதுகாக்க நீட்டித்த, நிலையான ராணுவப் போராட்டம் தேவை” எனத் தெரிவித்தார்.
சீன ராணுவம் ஒதுக்கி இருக்கும் இந்ம கூடுதல் தொகை, இந்தியாவின் நடப்பு ஆண்டு ராணுவ பட்ஜெட்டான 5.25 லட்சம் கோடி (70 பில்லியன் டாலர்) விட 3 மடங்கு அதிகமாகும்.
இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை மற்றும் அமெரிக்கா உடனான சீனாவின் அரசியல், ராணுவப் பதற்றங்களுக்கு மத்தியில் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.