சென்னை மாநகராட்சி மேயருக்கு வழங்கப்படும் அங்கி, செங்கோல், தங்கச்சங்கிலி ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மாநகராட்சிகளில் முதன்மையானது சென்னை மாநகராட்சி. சென்னை மாநகராட்சியின் மேயருக்கு வழங்கப்படும் அங்கி, செங்கோல், தங்கச்சங்கிலி ஆகியவற்றின் பின்னணி சுவாரஸ்யமானது. சென்னை மேயர் இரண்டு நிறங்களில் அங்கி அணிவார். ஒன்று சிவப்பு நிறம் மற்றொன்று கருப்பு நிறம். பதவி ஏற்பு விழா, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் நிகழ்ச்சி, குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் போன்றோர் பங்குபெறும் நிகழ்ச்சிகளின்போது சிவப்பு நிற அங்கி அணிவார். கருப்பு நிற அங்கியை மாதந்தோறும் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் அணிந்துகொண்டு கூட்டங்களை நடத்துவார்.
இந்த 125 பவுன் தங்க சங்கிலி முதல் மேயருக்கு 1933ஆம் ஆண்டு ராஜா முத்தையா செட்டியார் அன்பளிப்பாக வழங்கியது. அதேபோன்று வெள்ளி செங்கோலும் 1933ஆம் ஆண்டில் ராஜா முத்தையா செட்டியாரால் வழங்கப்பட்டது. தங்க நகை அணிவதும் செங்கோல் வைத்திருப்பதும் பிரிட்டிஷ் காலத்தில் ராஜ குடும்பம் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மரபுகளின் அடிப்படையில் பின்பற்றப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் தேசியக் கொடி எப்பொழுதும் பறக்கவிடப்படும். அதற்கு அருகாமையில் சென்னை மேயர் கொடி பறக்கவிடப்படும். மேயர் கொடி என்பது மேயர் சென்னை மாநகரில் இருக்கும்பொழுது மட்டும் பறக்கவிடப்படும். மேயர் சென்னை மாநகரில் இருக்கிறாரா என்பதை மக்கள் எளிதில் அறிந்துகொள்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM