உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் நாடுகள் ரஷ்யாவுடன் போருக்கு தயாரானதாகவே கருதப்படுவார்கள் என்று ஜனாதிபதி புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண் விமானிகளுடனான சந்திப்பு ஒன்றில் சனிக்கிழமை கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்,
அவ்வாறான தடை விதிப்பு என்பது, தங்கள் சேவையை முடக்குவதற்கு ஒப்பான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பார் என்றால், அடுத்த நொடியே அவர்களும் ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு தயாரானதாகவே கருதப்படும் என்றார்.
முன்னதாக தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
குறித்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு ஏற்கும் எனில், பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எந்த வித விமான சேவைகளும் உக்ரைன் வான்பரப்பில் பறக்க முடியாது.
இது ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும்.
மேலும், இந்த தடையை மீறிய எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம்.
ஆனால், உக்ரைன் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது.
மட்டுமின்றி, அவ்வாறான ஒரு நகர்வு, அணுஆயுதங்கள் கைவசம் வைத்திருக்கும் ரஷ்யா போன்ற ஒரு நாட்டை எரிச்சலூட்டுவதுடன், அது ஐரோப்பா முழுவதும் போர் சூழல் உருவாகும் நிலை ஏற்படும் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அப்பாவி மக்களை போர் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் இருந்து வெளியேற்ற போர் நிறுத்த நடவடிக்கை முன்னெடுப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதியின் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.