புதுடெல்லி: ‘உக்ரைனில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட தமிழக மாணவர்கள் 186 பேரை தமிழக அரசு தனி விமானத்தி்ல் சென்னை அழைத்து வநதது.உக்ரைனில் சிக்கித் தவிக்கும், தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை அழைத்து வர நடவடிக்கை எடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் போரில் எம்.பி.,க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அடங்கிய தமிழக சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,தமிழக மாணவர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்புக் குழு செல்ல உள்ளது.இந்நிலையில், டெல்லி சென்ற தமிழக சிறப்பு குழு உறுப்பினர்கள், வெளியுறவுஅமைச்சர் ஜெயசங்கரை அவரது அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், தமிழக மாணவர்களை விரைவில் மீட்க வலியுறுத்தப்பட்டது. பின்னர், எம்பி திருச்சி சிவா அளித்த பேட்டியில், ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக பிரதிநிதிகள் அடங்கிய குழு உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளுக்கு சென்று தமிழக மாணவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இன்று(நேற்று) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினோம். தமிழக மாணவர்களின் நிலை, சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அவரிடம் அளித்துள்ளோம். இதில் சுமி பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘இருநாடுகளும் போரிட்டு வருவதால் பாதுகாப்பு கருதி சுமியில் உள்ள மாணவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளைக்குள்(இன்று) அனைவரையும் இந்தியா அழைத்து வந்து விடுவோம் ’’ என்றார்.இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் மாணவர்கள் 444 பேர் தமிழக எம்பிக்கள் குழு முயற்சியால் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களில் 186 மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு தனி விமானத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டனர். இந்த விமானம் இரவு 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையத்தில் தமிழக மாணவ, மாணவிகளை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற 258 மாணவ, மாணவிகள் டெல்லியிலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அனுமதி கிடைக்குமா?உக்ரைனின் போர் நடக்கும் சூழலில் அதன் அண்டை நாடுகளுக்கு தமிழக குழு செல்ல அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் அளிக்கும் ஆலோசனையின்படி குழுவின் பயண திட்டம் அமையும். நேற்று வரையில் 777 தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்பாக திரும்பியதில் மகிழ்ச்சிஉக்ரைனில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த தமிழக மாணவர்களை திருச்சி சிவா எம்.பி. வரவேற்றார். அப்போது, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: உக்ரைனில் தவித்து கொண்டிருக்கும் தமிழர்களை மீட்க எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பாதுகாப்பான இடங்களுக்கு வந்தவர்களின் பட்டியல், போர் தீவிரமாக நடக்கும் பகுதியில் இருப்பவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. மீட்கப்பட்ட நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்பியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்து எடுத்த நடவடிக்கையால் நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.