நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால் கூட்டணி கட்சியினர் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.
வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு திமுக வேட்பாளர் போட்டியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தோல்வி அடையவைத்தார்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுக்கப்பட்டது. ஆனால், நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் நின்று வெற்றி பெற்றார். இதையடுத்து, முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நின்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார். திருத்துறைப்பூண்டி துணைத் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுக பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.