புதுடெல்லி: சாலைகளில் சுற்றி திரியும் நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘தெரு நாய்கள் உணவை பெறுவதற்கு உரிமை உண்டு, பொதுமக்கள் நாய்களுக்கு உணவளிக்கும் உரிமையை பெற்றுள்ளனர், அதே நேரத்தில் உரிமையை பயன்படுத்துவதில் அக்கறையும் எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும்,’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிக்கப்படுவதால், அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இதனால், மக்களுக்கு ஆபத்து ஏற்படும்,’ என கூறப்பட்டது.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், அனிருத்தா போஸ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம், டெல்லி அரசு உள்ளிட்டோர் 6 வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர். அதுவரையில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.