தான் ராணுவத்தில் இணையவில்லை என்று குறிப்பிட்டுள்ள உக்ரைனின் முன்னாள் ‘மிஸ் உக்ரைன்’ அனஸ்டாசியா லீனா, ரஷ்யாவுக்கு எதிராக போரிட மக்களை அழைக்கும் நோக்கிலேயே புகைப்படங்களை வெளியிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் போரிட்டு வருகின்றனர். பொதுமக்களும் போரில் பங்கேற்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்கி அழைப்பு விடுத்திருந்தார்.
இதை ஏற்று, முன்னாள் ‘மிஸ் உக்ரைன்’ அனஸ்டாசியா லீனா (31) ஆயுதம் ஏந்தியபடி ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவது போன்ற தோரணையுடன் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதிநவீன துப்பாக்கியுடன் போர்க்கோலம் பூண்டிருப்பது போன்ற அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
அத்துடன், “உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் எங்கள்மண்ணில் கால் பதிக்கும் அனைவரும் கொல்லப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் அவர் கருத்துப் பதிவு செய்திருந்தார்.
அந்தப் புகைப்படப் பதிவின்படி, உண்மையிலேயே அவர் ராணுவத்தில் இணைந்துவிட்டார் என்று பலரும் நம்பியதால், அந்த இன்ஸ்டாகிராம் பதிவு உலக அளவில் வைரல் ஆனது. இதை கவனித்த அனஸ்டாசியா லீனா தனது அந்தப் பதிவை எடிட் செய்தார்.
அதுகுறித்த விளக்கத்தில், தனக்கு ராணுவத்தில் இணையும் எண்ணம் இல்லை என்றும், தன் கையில் வைத்திருப்பது ஏர்சாஃப்ட் கன் வகையைச் சேர்ந்ததே தவிர, உண்மையான துப்பாக்கி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடுவதற்காக உக்ரைன் மக்களை அழைக்கும் வகையிலேயே, அந்தப் புகைப்படங்களை தாம் வெளியிட்டதாகவும் அவர் தனது விளக்கத்தில் தெரிவித்தார்.
அத்துடன், தன் நாட்டிலுள்ள மற்ற குடிமக்கள் போலவே தான் ஒரு சாமானிய மனிதர் – சாதாரண பெண் என்றும் அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.