தமிழ்நாட்டு அரசின் மரமான பனை சார்ந்த வாழ்வியலான பனையாண்மை பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் வகையில் பங்காளதேஷில் உள்ள சிட்டகாங் நகரில் அமைந்திருக்கும் பன்னாட்டு பெண்கள் கல்வி பயிலும் பெண்களுக்கான ஆசிய பல்கலையில் ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது.
பனை சார் வாழ்வியலை மீட்டுருவாக்கம் மேம்பாடு செய்யும் வழியில் பனையாண்மை கருத்தியலை உருவாக்கி பரப்பி வரும் கடையத்தை சேர்ந்த பனை மற்றும் சூழலியல் அறிஞர் பேராசிரியர் பாமோ பெண்களுக்கான ஆசிய பல்கலையில் வேதியல் பேராசிரியராக பணியாற்றி வருக்கிறார். இந்நிகழ்வின் நோக்கமானது தற்சார்பு மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஆசியப்பனையின் பங்கு என்பதாகும்.
இந்நிகழ்வில், பல ஆசிய நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 140 பனை சார் உணவு மற்றும் உணவிலிப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் , பர்மா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, ஈஸ்ட் திமோர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பனை பற்றிய பல ஆய்வுகட்டுரைகளும் பதாகை விளக்க காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், ஆய்வு மாணவிகள் கிறிஸ்டின் மற்றும் பயசா உருவாக்கிய பனைவீரர் மற்றும் பனையாண்மை என்ற இரு குறும்படங்கள் திரையிடப்பட்டன. பேராசிரியர் பாமோ மற்றும் ஆய்வு மாணவி கிறிஸ்டின் ஆய்வுரையாற்றினார்கள் . அவர்கள் பேசியதிலிருந்து,
”அடி முதல் நுனி வரை பயன்படும் பனையின் எண்ணிக்கையும் பனை சார் வாழ்வியலான பனையாண்மை புரிவோர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து வருவது சுழலியலுக்கு உகந்ததல்ல. பனைமரம் பயன்மரம், தனித்தன்மையான சுழற் தொகுதியாக விளங்கி பல நுண்ணுயிர்கள், தாவரங்கள், பறவைகள் ஊர்வன, விலங்குகக்கு உயிர் காற்று, உயிர்நீர், உணவு உறைவிடம் மருந்தாக விளங்குகிறது. சூழலியலைக் கெடுக்கும் வேதி பலபடிகளுக்கு மாற்று சூழலியலுக்கு உகந்த பனையோலை நார் பொருட்களே. இதன் மூலம் சூழலியலுக்கு உகந்த பல தொழில்களை தொடங்குவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம்.
அக்கறை என்ற பெயரில் தண்ணீர் விட்டு உரம் போட்டு மருந்தடித்து வளர்க்கப்படாத பனைமரத்தின் கலப்படமற்ற நேரடி பனை உணவுகளான பனம்பாலான கள், சுண்ணாம்பிட்ட பதநீர் (இதிலிருந்து உருவாக்கபடும் பனம்பாணி, கருப்பட்டி, கற்கண்டு), நுங்கு, பனம் பழம் (இதிலிருந்து உருவாக்கபடும் பானாட்டு, பனம்பழ பானம் ), தவுண், பனங்கிழங்கு (ஒடியல் மா, புழுக்கொடியல் ), குருத்து, ஆகியன உடலை உறுதியாக்கும் நோய்களை தவிர்க்க உதவும் மருத்துவ பண்பும் ஊட்டமிக்கதுமான உணவாகும்.
இவ்வழியில் பனை தற்சார்பு வாழ்வியலுக்கான மாரமாகவும் கீழ்க்கண்ட ஐ நா வின் நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகள்
இலக்கு 1: வறுமை இல்லை
இலக்கு 2: பசி இல்லை
இலக்கு 3: மக்களுக்குச் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்க்கை
இலக்கு 4: தரமான கல்வி
இலக்கு 5: பாலின சமத்துவம்
இலக்கு 6: சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
இலக்கு 7: மலிவான தூய்மையான எரிசக்தி
இலக்கு 8: கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி
இலக்கு 9: தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டமைப்பு
இலக்கு 10: சமத்துவ இன்மையைக் குறைத்தல்
இலக்கு 11: நிலைபேறுள்ள நகரங்கள் மற்றும் சமுதாயங்கள்
இலக்கு 12: பொறுப்புள்ள நுகர்வும் உற்பத்தியும்
இலக்கு 13: தட்பவெப்பநிலை நடவடிக்கை
இலக்கு 14: நீரின் கீழ் உயிர்கள்
இலக்கு 15: நிலத்தில் உயிர்கள் ஆகிவற்றை அடைவதிலும் சிறந்த பங்களிப்பை தரும் பனையை பாதுகாப்பது நமது தலைமுறைகளை பாதுகாக்கும் வழிமுறையாகும். அவ்வழியில் இந்த பனையாண்மை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை 19 நாடுகளைச் சேர்ந்த இளையோர்களிடம் பனை சார்ந்த வாழ்வியல் பொருளியல் சூழலியல் விழிப்புணர்வை உருவாக்கும் கருவியாகியுள்ளது” என்றனர்.
இந்நிகழ்வில் ஏராளமான பேராசிரியர்கள் 19 நாடுகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வை பேராசிரியர் பாமோ தலைமையில் பெ ஆ ப அறிவியல் மற்றும் கணித நிலையம், பனையாண்மை -தற்சார்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளர்ச்சிக்கான நடுவம் , பருவகால மாற்றம் மற்றும் சூழலியல் நல அமைப்பு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM