தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தயிர், நெய், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, அரை லிட்டர் தயிர் ரூ.27ல் இருந்து ரூ.30ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்குக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது. இது ஏழை எளிய மக்களை ஏமாற்றும் செயல். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துவிட்டு, இன்று #Aavin பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்குக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கி மக்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். pic.twitter.com/KMLGn0Mp8J
— O Panneerselvam (@OfficeOfOPS) March 4, 2022
ஆவின் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.