புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 29-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்வது என அனைத்து தொழிற் சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஏஐடியுசி அலுவலகத்தில் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி ஏஐடியுசி நிர்வாகிகள் அபிஷேகம், சேதுசெல்வம், சிஐடியு சீனுவாசன், கொளஞ்சியப்பன், ஐஎன்டியுசி சொக்கலிங்கம், ஏஐசிசிடியு மோதிலால், எல்எல்எப் கலைவண்ணன், எம்எல்எப் வேதா, வேணுகோபால், ஏஐயூடியுசி சிவக்குமார், என்டிஎல்எப் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக்கூடாது, தேசிய ஊரக வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும், அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து புதுச்சேரியில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.
நிறைவாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பு கோரிக்கைகளை விளக்கி மார்ச் 16-ம் தேதி பொதுக்கூட்டம், மார்ச் 23,24,25 தேதிகளில் பிரசார இயக்கம் நடத்துவது, மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தம், மார்ச் 29-ல் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும், அப்போது 12 இடங்களில் மறியல் போராட்டமும் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.