பெஷாவர்:பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில், சிறப்புத் தொழுகையின் போது குண்டு வெடித்து 57 பேர் பலியாகினர். காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. வெள்ளிக் கிழமையான நேற்று மதியம் இங்கு சிறப்புத் தொழுகை நடந்தது. அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
விடுமுறையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 10 பேர் மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளனர்.இந்த தாக்குதல் குறித்து பெஷாவர் எஸ்.பி.,ஹரூன் ரஷீத்கான் கூறுகையில், “தற்கொலைப் படையை சேர்ந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியதும், அதில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என்றார்.
மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாக்., பிரதமர் இம்ரான் கான், மாகாண தலைமைச் செயலர் மற்றும் பெஷாவர் ஐ.ஜி., ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம், பாகிஸ்தான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
Advertisement