”மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்குவதா?” : கர்நாடக அரசுக்கு துரைமுருகன் கண்டனம்

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.
05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது.
image
இந்த அறிவிப்பு வரும் கர்நாடக அரசின் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படி இருப்பினும், தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கேரள சட்டப்பேரவையில், அம்மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியநிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.