ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தமிழ்நாடு ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு தனது மூன்றாவது ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. நேற்றிய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 74 முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபா இந்திரஜித் 52 ரன்களும் கேப்டன் விஜய் சங்கர் 28 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் 54.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து 212 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஜார்கண்ட் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் சௌரப் திவாரி 41 ரன்களுடனும், குமார் குஷாக்ரா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஜார்கண்ட் அணி வெற்றி பெற 6 விக்கட்டுகள் கைவசம் இருக்க 110 ரன்கள் மட்டுமே தேவை. அதே நேரத்தில் தமிழக அணி வெற்றி பெற 110 ரன்களுக்குள் 6 விக்கட்டுகளையும் வீழ்த்த வேண்டும். இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.