தெலுங்கானா: ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் கருவியை இந்திய ரயில்வே வெற்றிகரமாக சோதித்துள்ளது. லேசர் அடிப்படையிலான ‘கவச்’என்ற கருவி, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வர நேர்ந்தால் இன்ஜின் இயக்கத்தை நிறுத்தி விபத்தை தடுக்கிறது. தெலுங்கானாவில் செகந்திராபாத் அருகே இந்த கருவி சோதிக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கவச் கருவியின் அம்சங்கள்: ‘கவச்’ கருவி பொருத்தப்பட்ட ரயில் நிலையங்களில் நுழையும்போது ஒரு பாதையில் இருந்து மற்ற பாதைக்கு மாறும் முன்பு தானாக வேகத்தை 30 கி.மீ அளவிற்கு குறைத்து மெதுவாகப் பயணிக்கும். ரயில்வே லெவல் கிராஸிங் கேட்டுகளை ‘கவச்’கருவி பொருத்திய ரயில் நெருங்கும்போது தானாக ஒலி எழுப்பி சாலை பயன்பாட்டாளர்களை எச்சரிக்கும். விபத்தில்லாத ரயில் பயணமாக ‘கவச்’ கருவி முழு ரயிலையும் கவசமாக பாதுகாக்கும். சிவப்பு விளக்கை கண்டால் ரயிலை உடனே நிறுத்தும். ரயில்கள் நேருக்குநேர் வந்தாலும் இரு ரயில்களும் தானாக நின்றுவிடும். அதோடு பாரத கவசம் – அவசர நேரத்தில் ரயில் இன்ஜின் டிரைவர் பிரேக் பிடிக்க தாமதமாகும் போது ‘கவச்’ தானியங்கி கருவி ரயிலை நிறுத்தும். இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதை தடுக்கும்.