கீவ்,
உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தரைவழி, வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.
இதற்கிடையில், தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார். ‘உக்ரைன் வான்பரப்பில் பறக்கத்தடை’ என்று நேட்டோ அறிவிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை நேட்டோ ஏற்று உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத்தடை என அறிவித்தால், பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எந்த வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக்கூடாது. இது ரஷிய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். மேலும், இந்த தடையை மீறிய எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம்.
ஆனால், தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக நேட்டோ தலைவர் ஸ்டோலன்பெர்க் கூறுகையில், வான்பரப்பில் பறக்கத்தடை நடைமுறையை அமல்படுத்த ஒரேஒரு வழி மட்டுமே உள்ளது. அது என்னனென்றால் நேட்டோ போர் விமானங்களை உக்ரைன் வான் எல்லைக்குள் அனுப்பி ரஷிய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி ‘விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிப்பது தான் இதற்கான வழி.
நாம் அதை செய்தால் அது அதிக நாடுகளை உள்ளடக்கி, பெருமளவு மனித இழப்புகளை ஏற்படுத்தி ஐரோப்பாவை முழுமையான போருக்கு கொண்டு செல்லும்’ என கூறி உக்ரைன் விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.