‘துள்ளுவதோ இளமை’ 2002 இல் வெளியாகிறது. இயக்கம் கஸ்தூரிராஜா என்றிருந்தாலும் படம் அவரது போல இல்லை. திரைக்கதையில் இருந்த மேஜிக் வேறு ஒருவருடையது. அது செல்வராகவனுடையது.
2003 இல் ‘காதல் கொண்டேன்’. தனுஷின் பாத்திரப்படைப்பும் சரி, அவ்வளவு சிக்கலான கதையை இயக்குநராகக் கையாண்ட விதமும் சரி, இவரின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன.
அதற்கு அடுத்த ஆண்டு ‘7ஜி ரெயின்போ காலனி’ படம். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருந்தது படம். ‘கண் பேசும் வார்த்தைகள்’ என இளைஞர்களை வசீகரித்த படம்.
புதுப்பேட்டை – கல்ட் மூவி என இன்றைக்கு கொண்டாடப்பட்டாலும் அன்றைக்கு படம் கண்டுகொள்ளப்படவில்லை. இது எதுவும் செல்வாவைப் பாதிக்கவில்லை.
தமிழில் வெற்றி இல்லாத போது தெலுங்கு படம் இயக்க சென்றார் செல்வா. ‘யாரடி நீ மோகினி’ எனத் தமிழில் வெளியாகிய படத்தின் ஒரிஜினல் தெலுங்கில் செல்வா எடுத்தது. அங்கு பெரிய ஹிட்.
முழு வேகத்தோடு நீண்ட நாள்களை எடுத்து கொண்ட படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. தொழில்நுட்பரீதியாக இன்னும் பல வகைக்கலைஞர்கள் இங்கே தேவை என்று செல்வராகவனை சொல்ல வைத்தது அந்தப் படம்.
அடுத்து வந்தன ‘மயக்கம் என்ன?’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’ படங்கள். புகைப்படக் கலைஞர், நண்பனின் காதலி என வித்தியாசமான கதைக்களம் ‘மயக்கம் என்ன?’.
இரண்டாம் உலகம் வண்ணமயமான பியூசரிஸ்டிக் படம். இவை இரண்டுமே வசூல் ரீதியாகக் கைகொடுக்கவில்லை.
என்.ஜி.கே மற்றொரு அரசியல் படம். சூர்யாவை தனக்கேற்ற கதாநாயனாக மாற்றியிருப்பார். படத்திற்கு பல்வேறு வகையிலான விமர்சனங்கள் வந்தன. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எஸ்.ஜே.சூர்யாவை இதுவரை இல்லாத ஒரு பாத்திரமாக வடித்திருப்பார்.
அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் மூலம் அவரைப் பற்றி எவ்வாறு புரிந்துகொள்ளலாம் என்று ஆராய்ச்சிக்கட்டுரைகளே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் அவற்றுக்குள் இருக்கின்றன.
பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் தாண்டி எளிதில் கடந்து போக முடியாது, கொஞ்சமேனும் விவாதிக்க வைக்கிற படைப்புகளைத் தந்தவர் செல்வராகவன்.
திரைத்துறையை நம்மால் இயன்ற அளவு அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்கிற எண்ணமுடைய மிகச்சில இயக்குநர்களில் செல்வராகவன் முக்கியமானவர்.
‘சாணிக்காயிதம்’, ‘பீஸ்ட்’ படங்களின் வழியாக நடிகராகவும் காட்சி தர இருக்கிறார் செல்வா. புதிது புதிதாக செய்பவருக்கு புதிய அகவைக்கான வாழ்த்துகள். ஹாப்பி பர்த்டே செல்வா!