சசிகலாவை நேற்று ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா உள்ளிட்ட தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திருச்செந்தூரில் சந்தித்து பேசி அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவருக்கு பொன்னாடை அணிவித்தனர்.
இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஓபிஎஸ் சகோதரர் ராஜா மற்றும் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் மற்றும் தேனி மாவட்ட மீனவர் அணி செயலாளர் வைகை கருப்பு ஜி உள்ளிட்ட நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இதனையடுத்து, ஓபிஎஸ்ன் சகோதரர் ராஜா, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா, முருகேசன் மற்றும் வைகை கருப்பு ஜி ஆகியோர் ஓபன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டுக்கு சென்று சசிகலாவை சந்தித்தற்கான தங்களது விளக்கத்தை அளித்து மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்காக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் செஞ்சி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏழுமலை திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் ஓபிஎஸ் பண்ணை வீட்டுக்கு வந்து மூன்று மணி நேரம் சந்திப்பிற்கு பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர்.