கீவ்:
உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற பகுதிகளில் ரஷியா தனது தாக்குதலை தொடர்கிறது. குறிப்பாக தலைநகர் கீவில் தொடர்ந்து முன்னேறுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு விவகாரம் மற்றும் நிதி உதவி குறித்து இரண்டுமுறை தொலைபேசியில் பைடனுடன் பேசியதாக தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
பைடனுடன் பேசுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் உரையாடினார்.
அப்போது தனது நாட்டை முற்றுகையிட்டுள்ள ரஷியாவிற்கு
கச்சா எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் வகையில் அதை தடுப்பு பட்டியலில் சேர்க்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது உக்ரைனுக்கு 10 பில்லியன் டாலர் அளவில் உதவிகள் வழங்கப்படும் என்று ஜெலென்ஸ்கியிடன் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தள்ளனர்.
எனினும் ரஷிய மீது கச்சா எண்ணெய் இறக்குமதி தடையை விதிக்கும் உக்ரைன் கோரிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. இது பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்தும் என்றும், அது அமெரிக்க நுகர்வோரை பாதிக்கும் என்று வெள்ளை மாளிகை கருதுவதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்…
புதின், இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள் – உக்ரைன் வெளியுறவு மந்திரி