காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான
பிரியங்கா காந்தி
அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பிரியங்கா காந்தியை முன்னிறுத்தித்தான் உத்தரப்பிரதேச தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் கணவர்
ராபர்ட் வதேரா
2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ராபர்ட் வதேரா – காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இணையர் கடந்த மாதம் தங்களது 25 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராபர்ட் வதேரா, “மக்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொதராபாத் தொகுதியில் போட்டியிடுவதா அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் உள்ள மக்களின் துன்பங்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பிரியங்கா காந்தியுடன் வீட்டில் விவாதிப்பதாக தெரிவித்துள்ள ராபர்ட் வதேரா, “நான் மக்களுக்கு தினமும் சேவை செய்கிறேன். தேர்தல் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாடு முழுவதும் இருக்கும் கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், குருத்வாராக்களுக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறேன். அரசியலில் என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். மக்களின் வாழ்க்கை சிறப்பாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.
மேலும் பேசிய அவர், பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச முதல்வராக வர வேண்டும் என்று அம்மாநில மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அது அவருடைய முடிவு. உத்தரப்பிரதேசத்துக்குள் மட்டும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்வதா அல்லது தேசிய அரசியலில் ஈடுபடுவதா என்பது குறித்து பிரியங்காதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ராகுல், பிரியங்கா ஆகியோரின் ரத்தத்தில் அரசியல் ஊறி இருப்பதால், அவர்கள் எல்லா இடங்களிலும் மக்களுக்காக உழைக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் இந்த முறை இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும் என்றும் ராபர்ட் வதேரா நம்பிக்கை தெரிவித்தார்.