சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நம்புகிறோம்.
பயங்கரவாதக் குற்றம் என்னும் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்படி அதிகபட்சத் தண்டனைகள் வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படும் என தமிழகம் எதிர்பார்க்கிறது.
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.” ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றைப் பாராளுமன்றம் இயற்றவேண்டும்” என அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது.
அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்து இருக்கிறது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றுமாறும் அதுவரை உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துமாறும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.