ஆளுநர் உரையின்றி தெலங்கானா மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அண்டை மாநிலமான தெலங்கானாவில், முதலமைச்சர்
சந்திரசேகர் ராவ்
தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். மேலும் இவர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில், 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (மார்ச் 7 ஆம் தேதி) ஆளுநர் உரையின்றி தொடங்கும் என, அம்மாநில அரசு அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
“நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி வரும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இப்போதுள்ள சட்டங்களை மரபுகளையும் மதிப்பதில்லை” என்று பாஜக மாநில தலைவர் சஞ்சய் குமார் சாடியுள்ளார். அதேபோல காங்கிரஸ் தலைவர் ஜீவன் ரெட்டி, “புதிய நிதியாண்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் போது ஆளுநர் உரை தேவை. அப்போது தான் அந்த ஆண்டிற்கு அரசின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்” என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கிடையே, “நாளை தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர், இந்த ஆண்டின் புதிய கூட்டத்தொடர் அல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டத்தொடரின் தொடர்ச்சியாகவே சபை கூடுவதால், ஆளுநர் உரை தேவையில்லை” என, தெலங்கானா மாநில அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தெலங்கானா மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தெலங்கானா சட்டப்பேரவை ஐந்து மாத இடைவெளிக்கு பின் மீண்டும் கூடுகிறது. இவ்வளவு பெரிய இடைவெளிக்கு பின் சபை கூடுவதை புதிய கூட்டத்தொடராகத் தான் கருத முடியும். ஆளுநர் உரையுடன் சபை கூடும் வழக்கம் மீறப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
ஆளுநரின் உரை என்பது அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை தான். முந்தைய ஆண்டில் அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளும் அடுத்த ஆண்டுக்கான கொள்கை குறிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். அரசின் செயல்பாடுகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களை நடத்த இது உதவும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை தவிர்த்து இருப்பதன் மூலம், அரசின் முந்தைய ஆண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை உறுப்பினர்கள் இழக்க நேரிடுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.