இசையில் மிரட்டும் ‛ரீ'; இயக்குனர் சுந்தரவடிவேல்
வெள்ளை திரையில் கலர் காட்சிகளை அள்ளி தெளிக்கும் கனவு தொழிற்சாலையான சினிமாவில் ' நானும் ஒரு நாள் இயக்குனராவேன்' என 8 ஆண்டுகளாக முயற்சி செய்து அறிமுக இயக்குனராகி, மிரட்டும் இசையின் பின்னணியில் ரீ என்ற உளவியல், திரில்லர் படத்தை இயக்கி முதல் வெற்றி படியில் காலடி வைத்துள்ளார் மதுரை சுந்தரவடிவேல்.
‛‛சினிமா கனவுகளை நிஜமாக்கும் எண்ணம் எனக்குள் இருந்தாலும் கல்லுாரி முடித்து, பிலிம் மேக்கிங் படித்தும் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இது நம் லட்சியமல்ல என தடம் மாறி 8 ஆண்டுகளாக முயற்சித்து சினிமாவுக்குள் தீவிரமாக களமிறங்கினேன். 'சண்டி முனி' படத்தில் உதவி இயக்குனராக, 'போகி' குறும்படத்தில் இயக்குனராக இருந்து பல அனுபவங்களை பெற்றேன். அந்த அனுபவங்களை வைத்து தற்போது 'ரீ ' படம் தயாரித்து இயக்கியுள்ளேன்.
முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கிய இந்த படத்தில் 2 பக்கத்து வீட்டு ஜோடிகளை மையமாக வைத்து கதை களம் நகரும். பல சினிமாக்களில் நடித்த காயத்ரி ரீமா ஹீரோயினாக நடித்துள்ளார். அவரை சுற்றி அதிகளவு கதை நகர்வதால் அவர் பெயரின் முதல் எழுத்தான 'ரீ 'யை படத்தின் தலைப்பாக வைத்தேன். இசையமைப்பாளர் தீனா சகோதரர் ஹரிஜியின் மிரட்டும் இசை திரில்லர் படம் என அழுத்தமாக பதிவு செய்யும். விரைவில் டிரைலர், டீசர், படம் ரிலீஸ் ஆகிறது. என் அம்மா கொடுத்த உற்சாகம், நம்பிக்கை என்னை ஒரு இயக்குனராக உயர்த்தியிருக்கிறது'' என்றார்.