‘புதுச்சேரி ; ‘இடிந்து விழுந்த துறைமுக பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.புதுச்சேரியில் 60 ஆண்டுகள் பழமையான துறைமுக பாலத்தின் நடுப்பகுதி நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பாலத்தை கவர்னர் தமிழிசை நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, புதுச்சேரியின் அடையாளமாக திகழ்ந்த துறைமுக பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அதைத் தொடர்ந்து, கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது;கடல் சீற்றம் காரணமாக பழைய துறைமுக பாலம் இடிந்து விழுந்தது வருத்தம் அளிக்கிறது. நள்ளிரவில் பாலம் இடிந்ததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது ஆறுதலான விஷயம்.இப்பாலம் புதுச்சேரியின் அடையாளம். இதனை அகற்றிவிடக் கூடாது. பழமை மாறாமல் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். என் விருப்பமும் அதுதான். முதல்வரிடம் ஆலோசித்து, பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப் படும்.’சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் இப்பகுதியை மேம்படுத்த ரூ. 60 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. சாகர் மாலா திட்டத்தின் கீழ் வேலை நடைபெறும்போது, பழமை மாறாமல் இருக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன்.அந்த காலத்தில் இங்கு பல சரக்கு கப்பல்கள் வந்து சென்றுள்ளது. இது மிகப்பெரிய வாணிப ஸ்தலமாக இருந்துள்ளது.
அந்த பழமையை மீட்டெடுக்க வேண்டும்.சாகர் மாலா திட்டத்தில் பெரிய சரக்கு கப்பல்கள் இயக்குவதற்கான முயற்சி நடந்து வருகிறது. சுற்றுலா துறையை மேம்படுத்தவும், கப்பல் விடவும் ஏற்பாடு நடக்கிறது.ராஜ்நிவாஸ் கட்டடமும் சிறிது பலம் குறைந்து உள்ளது. அதனை இடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளேன்.மத்திய அரசு வெள்ள நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 17 கோடி கொடுத்துள்ளது. பணம் மட்டும் இன்றி மத்திய அரசு பொருளாக நிறைய உதவிகள் செய்துள்ளது. புதுச்சேரிக்கு அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement