தெலங்கானா மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் தனது உரையுடன் தொடங்காததற்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்
தெலங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையின்றி திங்கள் கிழமை தொடங்கும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதாலும் ஏற்கனவே நடந்த தொடரின் தொடர்ச்சி என்பதாலும் ஆளுநரின் உரை தேவையில்லை என்றும் தெலங்கானா அரசு விளக்கம் அளித்திருந்தது. தெலங்கானா அரசின் இம்முடிவுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், 5 மாத இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடினால் அதை புதிய கூட்டத்தொடராகத்தான் கருத வேண்டும் என்றும் ஆளுநரின் உரை இன்றி ஆண்டின் பேரவை தொடர் தொடங்குவது மரபை மீறிய செயல் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். ஆளுநரின் உரை இடம் பெறாததால் முந்தைய ஆண்டில் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கூடிய வாய்ப்பை பேரவை உறுப்பினர்கள் இழந்துவிட்டதாகவும் தமிழிசை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM