புதுடில்லி : வெளிநாடுகளில் மருத்துவத்திற்கான, ‘இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை நிறைவு செய்யாமல் நாடு திரும்பிய மாணவர்களுக்கு, இந்தியாவில் அந்தப் பயிற்சியை முடிக்க, தேசிய மருத்துவ கமிஷன் அனுமதி அளித்துள்ளது.போர் நடந்து வரும் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இதில், பெரும்பாலானோர் மாணவர்கள். மருத்துவ படிப்பிற்காக உக்ரைன் சென்ற அவர்கள், போர் துவங்கியதால், படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்புகின்றனர். பலர் மருத்துவ படிப்பை முடித்தும், இன்டர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்யாமல் வந்துள்ளனர்.இந்நிலையில், என்.எம்.சி., எனப்படும், தேசிய மருத்துவ கமிஷன், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா நெருக்கடி, போர் போன்ற காரணங்களால், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்தும், இன்டர்ன்ஷிப் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பலர் நாடு திரும்பி உள்ளனர்.அவர்களின் நிலையை கருத்தில் வைத்து, அந்தப் பயிற்சியை இந்தியாவிலேயே முடிக்க, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதற்கு பதிவு செய்துகொள்ள விரும்பும் மாணவர்கள், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.பின், அவர்களுக்கு, 12 மாதங்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற, மாநில மருத்துவ கவுன்சில்கள் அனுமதி அளிக்கலாம் அல்லது அவர்களின் மீதமுள்ள பயிற்சி காலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கலாம்.
பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்களிடம் இருந்து, மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது. உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து வசதிகளும், அவர்களுக்கு செய்து தரப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement