மொகாலி: முதல் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் ‘சுழலில்’ அசத்த இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 574 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்திருந்தது. நிசங்கா (26), அசலங்கா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (61*) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். அசலங்கா (29) ஓரளவு கைகொடுத்தார். டிக்வெல்லா (2), சுரங்கா லக்மல் (0), எம்பல்டெனியா (0), விஷ்வா பெர்ணான்டோ (0), லகிரு குமாரா (0) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் இலங்கை அணி 174 ரன்னுக்கு சுருண்டு, ‘பாலோ-ஆன்’ பெற்றது. இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட் கைப்பற்றினார்.
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு லகிரு திரிமான்னே (0), பதும் நிசங்கா (6) ஏமாற்றினார். கேப்டன் திமுத் கருணாரத்னே (27), மாத்யூஸ் (28), தனஞ்செயா டி சில்வா (30), சரித் அசலங்கா (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய டிக்வெல்லா (51) அரைசதம் கடந்தார். ஜடேஜா ‘சுழலில்’ லக்மல் (0), எம்பல்டேனியா (2) சிக்கினர். அஷ்வினிடம் லகிரு குமாரா (4) சரணடைந்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 178 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் அஷ்வின், ஜடேஜா தலா 4, ஷமி 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் மார்ச் 12-16ல் பெங்களூருவில் நடக்கவுள்ளது.
Advertisement