பாஜகவின் கோட்டையாக கருதப்படும் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதன் மூலம் குமரி மாவட்டத்தில் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அத்துடன் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து அவரது அரசியல் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
முக்கியமாக மாவட்ட அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான மனோதங்கராஜ் – நாகர்கோவில் நகர செயலாளர் மகேஷ் கூட்டணி, மேயர் பதவியை அடைந்ததுடன் இருவரின் பொது அரசியல் எதிரியான சுரேஷ்ராஜனை மாவட்ட அரசியலில் இருந்து அகற்றி உள்ளனர்.
இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை மனோதங்கராஜ் விழ வைத்திருக்கிறார் என்று பெருமைப் படுகின்றனர் இவரது ஆதரவாளர்கள்.
இதற்கு முன் நாகர்கோவில் நகராட்சியை 2 முறை கைப்பற்றிய பாஜக, நாகர்கோவில் மாநகராட்சியான பின் சந்தித்த முதல் தேர்தலில் படு தோல்வியைத் தழுவியது.
மொத்தமுள்ள 52 வார்டுகளில் பாஜக 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்றது.
அதே நேரத்தில் திமுக தனியாக 23 வார்டுகளிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 7 வார்டுகளிலும் மதிமுக ஒரு வார்டிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
சுயேட்சைகள் 2 வார்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் மேயர் பதவி திமுகவுக்கு உறுதியான நிலையில் தான் அரசியல் விளையாட்டு ஆரம்பமானது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தொடக்கத்தில் இருந்து நாகர்கோவில் நகர செயலாளரும் அரசு வக்கீலாக இருப்பவருமான மகேஷை மேயர் பதவிக்கு முன்னிறுத்தி வந்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோதங்கராஜ். ஆனால் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் இதை விரும்பாமல் தனக்கு வேண்டிய இருவரை மேயர் பதவிக்கு முன்னிறுத்தி வந்தார்.
திமுகவினரின் கோஷ்டி பூசலால் வெற்றி பறி போய்விடக் கூடாது என எண்ணிய திமுக தலைமை இதற்காகவே தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனை தேர்தல் முடியும் வரை நாகர்கோவிலில் தங்கியிருக்க செய்து இருவரையும் சமாதானப்படுத்தியது.
முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சுரேஷ் ராஜன், மேயர் பதவிக்கு நகர செயலாளர் மகேஷ் பெயரை முன்மொழியாத காரணம் தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் மகேசால் எந்த நேரமும் தனது பதவிக்கு ஆபத்து வரலாம் என்பது மட்டுமே.
அதைத்தான் இப்போது அதிரடியாக செய்திருக்கிறார் திமுக தலைவர் என்கின்றனர் திமுகவின் உண்மை விசுவாசிகள்.
என்ன நடந்தது?
திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகேஷ் மேயராக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த மறுநிமிடமே பாஜக வேட்பாளர் மீனாதேவ் அவரை எதிர்த்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மகேஷ் 28 வாக்குகளும் மீனாதேவ் 24 வாக்குகளை பெறவே மகேஷ் வெற்றி பெற்றதாக அறிவித்தார் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்.
அப்போதே 32 வாக்குகள் பெற வேண்டிய மகேஷ் 28 வாக்குகளுடன் வென்றது எப்படி என ஒரு முணுமுணுப்பு தொடங்கியது.
அடுத்ததாக துணை மேயர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட மேரி பிரின்சி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த போது தான் அவரை எதிர்த்து திடீர் போட்டி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
9 வது வார்டில் திமுக சார்பில் வென்ற ராமகிருஷ்ணன். இவர் சுரேஷ் ராஜன் ஆதரவாளராக கருதப்படுபவர். அவருக்கு பாஜக ஆதரவு தருவதாக அறிவிக்க எங்கும் கூச்சல்.
வாக்குப்பதிவு தொடங்கியது. மீண்டும் அதே 28- 24 என்று வாக்கு விகிதத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றதாக அறிவித்தார் ஆணையர் ஆஷா அஜித்.
திமுக கூட்டணியில் மொத்தம் 32 வாக்குகள் இருந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் வெறும் 28 வாக்குகள் பெற்றது எப்படி என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது திமுக தலைமை.
இந்த 4 வாக்குகளை பாஜக அடைந்தது எப்படி என்றெல்லாம் துருவி துருவி விசாரிக்கப்பட்டது. ஒரு வேளை பாஜக பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கியதா அல்லது தலைமை அறிவித்த வேட்பாளர்களால் அதிருப்தியடைந்த திமுக மாவட்ட செயலாளர் செய்த உள்ளடி வேலையா என்றெல்லாம் ஆராய்ச்சி தொடங்கியது.
முடிவில் இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனுக்கு தொடர்பு இருந்ததை ஆதார பூர்வமாக நிரூபித்தார் திமுக மேலிட பார்வையாளர்களில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர்.
இந்த நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து திமுகவினர் வென்றது, திமுகவில் பல மாவட்டங்களில் நடந்தது.
இதனால் எரிச்சலில் இருந்த திமுக தலைமை உள்ளடி வேலைகளால் வென்றவர்கள் உடனடியாக தமது பதவிகளை ராஜினாமா செய்து விட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன் விளைவு தான் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளரை களமிறங்கிய சுரேஷ் ராஜன் அதிரடியாக நீக்கப்பட்டதன் பின்னணி என்கின்றனர் திமுக உயர்மட்ட தலைவர்கள்.
இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக நாகர்கோவில் நீதிமன்ற சாலையை சேர்ந்த ஆர். மகேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரே நாளில் மேயர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவி என்று நகர செயலாளராக இருந்த மகேஷை திமுக தலைமை திக்குமுக்காட செய்ய என்ன காரணம்?
அதுவும் எம் எல் ஏ , அமைச்சர், மாவட்ட செயலாளர் என படிப்படியாக திமுக தலைவர் குடும்பத்தில் மதிப்பும் மரியாதையாக இருந்த சுரேஷ் ராஜன் பதவி ஒரே நாளில் பறிக்கப்பட்டத்தை ஒரு அரசியல் அதிசயமாகவே பார்க்கின்றனர் குமரி மாவட்ட அரசியல் கட்சியினர்.
சுரேஷ்ராஜன் அரசியலில் நுழைந்தபோது அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கன்னியாகுமரி சட்டசபை தொகுதியை சமுதாய வாரியாக வெல்ல திமுக தலைமையால் தயார் செய்யப்பட்டவராக இவர் கருதப்பட்டார்.
இவர் சார்ந்த பிள்ளை சமுதாயம் அதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தது. கன்னியாகுமரி தொகுதியில் தளவாய் சுந்தரத்துக்கு எதிராக இவரை களமிறக்கியவர் அன்றைய திமுக இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின்.
சென்னை, கோவை, நெல்லை… 8 மாவட்டங்களில் பாஜக கமிட்டிகள் கலைப்பு; புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
காலப் போக்கில் திமுகவின் செல்லப் பிள்ளையாக மாறிப்போன சுரேஷ்ராஜன் ஸ்டாலின் மனதை கொள்ளை கொண்டு அவரது குடும்பத்தினர் மனதிலும் இடம் பிடித்ததால் அடுத்தடுத்து எம் எல் ஏ , அமைச்சர் என உயர்ந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் தோற்றதால் தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் மாவட்ட அரசியலில் புயல் போல வளர்ந்த மனோதங்கராஜ் சட்டமன்ற தேர்தலில் வென்று அமைச்சர் ஆனார்.
அதிலிருந்து அவரை எதிரியாக கருதிய சுரேஷ்ராஜன் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் வெறுக்க ஆரம்பித்ததில் விளைவே இன்றைய அவரது பேரழிவு என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.
அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்காக நேர்காணலுக்கு மகேசும் விண்ணப்பித்திருந்தார். நேர்காணலின் போது ஸ்டாலினிடம் எனக்கு சீட் தராவிட்டாலும் பரவாயில்லை.
எங்கள் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனுக்கு சீட் வேண்டும் என மல்லுக்கு நின்றாராம் இவர். எனக்கு அடுத்த முறை உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தாராம்.
இதையெல்லாம் மனதில் கொண்டே நகர செயலாளர் மகேசுக்கு மேயர் பதவிக்கு வாய்ப்பு தரப்பட்டதாகவும் அதை சுரேஷ்ராஜன் எதிர்த்ததால் தான் திமுக தலைமை அவரை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாவும் உறுதியான தகவல் உண்டு.
நாகர்கோவில் மாநகராட்சியில் 4 வாக்குகள் மாறிய பிரச்சனையில் திமுக தலைவர் எடுத்த நடவடிக்கைகளால் ஆடிப் போயிருக்கின்றனர் திமுக மாவட்ட செயலாளர்கள்.
விசுவாசமாக இல்லாமல் உள்ளடி வேலை செய்தால் சாட்டையும் எடுப்பார் திமுக தலைவர் என்று பயத்துடன் சொல்கின்றனர் திமுகவினர்.
இந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் கோலோச்சும் நீண்ட நாள் பதவியில் இருக்கும் மாவட்ட செயலாளர் ஒருவரையும் விசாரித்து வருவதால் மேலும் கலக்கத்தில் இருக்கின்றனர் திமுக மாவட்ட செயலாளர்கள்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை கொண்டாடி நன்றி செலுத்தும் விதமாக தனது சுற்றுப் பயணத்தை நாகர்கோவிலில் இருந்து ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின்.
நாகர்கோவில் மேயர் மகேஷை ஆரத்தழுவிய ஸ்டாலின் சிறப்பாக செயல்படுங்கள். திமுகவில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று நம்பிக்கையூட்டி சென்றிருக்கிறார்.
மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜை வாழ்த்திய ஸ்டாலின் மகேஷை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவாதமும் வாங்கிச் சென்றிருக்கிறார் என்கின்றனர் கழகத்தினர்.
ஸ்டாலினை சந்திக்க சுரேஷ்ராஜன் முயன்ற போது பொதுச்செயலாளரை பார்த்துக் கொள்ளுங்கள் என்ற பதிலே கிடைத்ததாம். இதனால் அப்செட்டில் இருக்கிறது சுரேஷ்ராஜன் தரப்பு.
-த. வளவன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“