‘உக்ரைனில் இருந்து கடைசி இந்திய மாணவரை மீட்கும் வரை வெளியேற மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் உக்ரைனில் தங்கியுள்ள இந்திய மருத்துவர் ஒருவர்.
கடந்த 9 நாட்களாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டு வந்த ரஷ்யா, 10-வது நாளில் மீட்புப் பணிக்காக போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதனிடையே உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ‘இந்திய மாணவர்களை பத்திரமாக வெளியேற்றிய பின்னரே நாடு திரும்புவேன்’ என உக்ரைனில் உள்ள கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவர் பிரித்வி ராஜ் கோஸ் (வயது 37) என்பவர் கூறியுள்ளார்.
இதுபற்றி பிரித்வி ராஜ் கோஸ் கூறுகையில், ”நான் கீவ் நகரில் சிக்கியுள்ளேன். வாய்ப்பு கிடைத்தாலும் இந்தியா செல்ல விருப்பம் இல்லை. கீவ் நகரில் இருந்த 350 மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இவர்கள் அனைவரும் எனது மாணவர்கள். மேலும் சில ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது மாணவர்களுக்கும் உதவும்படி கூறியுள்ளனர். குறிப்பாக சுமி நகரில் தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டியுள்ளது.
என்னை நினைத்து எனது பெற்றோர் கவலையடைந்து உள்ளனர். ஆனால் எனது பொறுப்பை நான் தானே செய்ய வேண்டும். மாணவர்களை பத்திரமாக இந்தியா அனுப்புவதாக அவர்களின் பெற்றோர்களிடம் உறுதி அளித்துள்ளேன். இதை முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன்” என்றார்.
இதையும் படிக்க: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கேரள கர்ப்பிணி: குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறார்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM