உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் இருந்து கடந்த 22 ஆம் தேதி முதல் தற்போது வரை 15,900 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, ரஷ்யப் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதை அடுத்து உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்திற்கு ஆப்பரேஷன் கங்கா என பெயர் வைக்கப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் இருந்து கடந்த 22 ஆம் தேதி முதல் தற்போது வரை 15,900 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், இன்று மட்டும் 11 சிறப்பு விமானங்கள் மூலம், உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து 2,135 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கடந்த 22 ஆம் தேதி முதல், 15,900 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர். நாளை 8 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதில் 5 புடாபெஸ்ட், 2 விமானங்கள் சுசெவா மற்றும் புகாரெஸ்ட் நகருக்கு ஒரு விமானம் இயக்கப்பட்டு 1,500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தங்களது மொபைல் எண் மற்றும் இருப்பிடத்தை பகிருமாறு தெரிவித்துள்ளது.