கரூர்: உக்ரைனில் மருத்துவம் படிக்கும் கரூர் மாணவி ஸ்ரீநிதி விமானம் மூலம் இன்று (மார்ச் 6ம் தேதி) காலை கோவை வந்தடைந்தார்.
கரூர் பசுதிபாளையம் அருணாச்சலம் நகர் 6 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி கேப்ரியல் (48). இவர் தனியார் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கார்த்திகாயனி. இவர்கள் மகள் ஸ்ரீநிதி (20). மகன் சாம் இமானுவேல் (13).
கரூரில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டுபிளஸ் 2 தேர்வில் 425 மதிப்பெண்கள் பெற்ற தேர்ச்சி பெற்ற நிலையில் நீட் தேர்வில் 210 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் உக்ரைன் நாட்டின் டெனிப்ரோ நகரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது அங்கு 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியதால் அச்சமடைந்த ஸ்ரீநிதியின் பெற்றோர் உக்ரைன் டெனிப்ரோவில் உள்ள மகளுடன் அன்றைய தினம் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை போனில பேசி அங்குள்ள நிலவரங்களை தெரிந்துக் கொண்டனர். மேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இந்நிலையில் ஸ்ரீநிதி இன்று (மார்ச் 6ம் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை விமானநிலையத்தை வந்தடைத்தார். மகளை வரவேற்பதற்காக மனைவி, மகனுடன் கோவை சென்றிருந்த கேப்ரியல் மகளை வரவேற்று அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான குன்னூருக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து அவர் கூறியது, நேற்று காலை புதுடெல்லி வந்த ஸ்ரீநிதி இன்று கோவையை வந்தடைந்தார் என்றார்.
இதுகுறித்து ஸ்ரீநிதிகூறியது, ”நீட்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ இடம் கிடைக்காததால் உக்ரைனில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கிய நிலையில் டெனிப்ரோவில் விடுதி அருகே பெரியளவிலான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால், அதன்பிறகு தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை. 5 நாட்கள் விடுதியில்தான் தங்கியிருந்தோம்.
கடந்த மார்ச் 1ம் தேதி உக்ரைனின் அண்டைநாடான ருமேனியா சென்றடைந்தோம். அங்கு தங்கியிருந்த நிலையில் கடந்த 4ம் தேதி இரவு ருமேனியாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நேற்று காலை டெல்லியை வந்தடைந்தோம். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு கோவையை வந்தடைந்தேன்” என்றார்.