மாஸ்கோ,
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.
இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது.
நேற்றுமுன்தினம் ஐரோப்பாவின் மாபெரும் அணுமின்நிலையம் என கருதப்படுகிற உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின்நிலையம் மீது தாக்குதல் நடத்தி ரஷியா கைப்பற்றியது. இதனால் கதிர்வீச்சு ஆபத்து அச்சுறுத்தல் ஏற்பட்டதால் உலகளாவிய கண்டனக்கணைகளை ரஷியா சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுத்து, 10 நாள் போர் நடத்தி 2,037 ராணுவ கட்டமைப்புகளை அழித்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. அதில் 71 கட்டளை சாவடிகள், தகவல்தொடர்பு மையங்கள், 98 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள், 61 ரேடார் நிலையங்கள், தரையில் 66 விமானங்கள், வானில் 15 விமானங்கள், 74 ராக்கெட் லாஞ்சர்கள், 708 டாங்கிகள், 505 ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்ட உக்ரைன் ராணுவ சொத்துக்களில் அடங்கும். இந்த தகவல்களை ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷெங்கோவ் தெரிவித்தார்.