உக்ரைனின் அணு மின் நிலையத்தை ரஷ்யா தாக்கியது அபாயகரமான செயல் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைனின் ஜபோரிஜியா அணு மின் நிலையத்தின் மீது ரஷ்யா நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதில் நிலையத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அந்த அணு மின்நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள், உக்ரைனின் அணு மின் நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுபோன்ற செயல் அபாயகரமானது எனஎச்சரிக்கை விடுத்தனர். உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுபோல, இந்தியா, சீனா நாடுகளின் பிரதிநிதிகளும் எந்த ஒரு நாட்டையும் குறிப்பிடாமல் தங்களது கவலையை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசும்போது, “அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அணுசக்தி நிலையங்களில் எவ்வித விபத்து நேர்ந்தாலும் அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்” என்றார்.
எனினும், இக்கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) இயக்குநர் ரபேல் மரியானோ கிராசி கூறும்போது, “உக்ரைனில் உள்ள அணுசக்தி நிலையத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, ரஷ்ய தாக்குதலால் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்பட வில்லை” என்றார்.