உ.பி.யில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் இன்ஜின் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ பரவுவதைத் தடுக்க மற்ற பெட்டிகளை பயணிகள் தள்ளி சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் தவுரலா ரயில் நிலையத்தில் நேற்று சஹாரன்பூர்-டெல்லி பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இது அடுத்த 2 பெட்டிகளுக்கு பரவி எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் தீ பரவுவதைத் தடுக்க பயணிகளும் ரயில் நிலைய ஊழியர்களும் மற்ற பெட்டிகளை தள்ளிச் சென்றனர். இதனால் மற்ற பெட்டிகள் தீ விபத்திலிருந்து தப்பியதுடன் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து தடைபட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே இந்தக் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இது வேகமாக பகிரப் பட்டு வருகிறது.