உத்தர பிரதேச மாநிலத்தில் 54 தொகுதிகளுக்கு நாளை கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துபிரதமர் நரேந்திர மோடி 2 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாரணாசியில் மக்களுடன் மக்களாக கலந்து பிரதமர் உரையாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2014, 2019 ஆகிய 2 மக்களவைத் தேர்தலிலும் உ.பி.யின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பிரதமர் மோடி. வாரணாசியை சுற்றி உ.பி. கிழக்குப் பகுதியின் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகள் நாளை கடைசி கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்தத் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசியில் மக்களோடு மக்களாக கலந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் பாஜக.வுக்கு சவாலாக உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த செயல் வாரணாசியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வாரணாசிக்கு வந்த பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு உணவுக்கு பிறகு திடீரென வெளியில் கிளம்பினார். நேராக ராணுவ குடியிருப்பு பகுதியில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்றவர் அங்கிருந்தப் பயணி களுடன் பேசினார்.
பிரதமரை காண நெரிசலுடன் குவிந்தக் கூட்டத்தை சமாளிப்பது அவரது பாதுகாவலர்களுக்கு சவாலாக இருந்தது. அங்கிருந்து கங்கையின் கடைசி கரையான கிர்கியா படித்துறை பகுதிக்கு சென்றவர், அங்கு அமர்ந்து இரவு ஒளியில் புனித நதியை ரசித்தார். உடனிருந்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சரும் உ.பி. தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானுடன் சிறிது நேரம் ஆலோசனையும் நடத்தினார்.
பிறகு, தான் தங்கியிருந்த பரேகாவின் அரசு இல்லத்துக்கு திரும்பும் வழியிலும் திடீரென வாகனத்தை நிறுத்த உத்தரவிட்டார். அங்கிருந்து சிறிய வகை உணவு விடுதிக்கு சென்றவர், அங்கிருந்த பணியாளர்களிடம் பேசியபடி தேநீர் அருந்தினார். மறுநாள் நேற்று காலை சுமார் 3 மணி நேரம் வாரணாசி வீதிகளில் நேரடி பிரச்சாரம் செய்தார்.
இதில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று தரிசனம்செய்தவர் அங்கிருந்த பக்தர்களுடன் கலந்து பேசினார். சிவபூஜையில் மூழ்கியிருந்தவர்களிடம் மேளத்தை வாங்கி இசைத்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி. வாரணாசி வீதிகளில் நுழைந்தும் பிரச்சாரத்தை தொடர்ந்தவர், ஒரு சிறியசாலையோர கடையில் (தாபா) மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தியபடி சிறிது நேரம் பேசினார்.
இதனிடையே பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
கடந்த 6 கட்ட தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை புறக்கணித்து பொதுமக்கள் பாஜக.வுக்கு வாக்களித்துள்ளனர். கடைசி கட்ட தேர்தலில் கிழக்கு பகுதி வாசிகளால் பாஜக.வுக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. நீங்கள் அளித்த ஆசிர்வாதத்துக்கு முன்கூட்டியே நன்றி செலுத்த நான் இங்கு வந்துள்ளேன். இதுபோன்ற தேர்தல் வரவேற்பை கடந்த 10 ஆண்டுகளில் எவரும் பார்த்ததில்லை.
நம் நாட்டுக்கு பல சவால்கள் வருகின்றன. அன்று கரோனா பரவல் போன்ற பிரச்சினைகளை இன்று உக்ரைனால் சந்திக்கிறோம். இதை நான் நம் நாட்டின் 130 கோடி மக்களுடன் இணைந்து எதிர்கொள்வேன். நற்பணிகளை எதிர்க்கட்சிகள் என்றுமே பாராட்டியதில்லை. ஏனெனில் விமர்சனம் செய்வது மட்டுமே அவர்களது கொள்கையாகும்.
இவ்வாறு மோடி பேசினார்.
உ.பி.யில் இருந்த 2 நாட்களிலும் பிரதமரை கண்டு உற்சாகமான வாரணாசிவாசிகள் ‘ஜெய்ராம்’, ‘மோடி… மோடி’ என்று கோஷமிட்வனர். 2014 முதல் தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற பிரதமர் மோடியின் கடைசி கட்ட தேர்தலுக்கானப் பிரச்சாரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்றுமுன்தினம் கடைசி கட்ட பிரச்சாரம் செய்தனர்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவும் வாரணாசியை சுற்றியுள்ள தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.