தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெற்றது. அப்போது, திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக தலைமையின் அறிவிப்பை மீறி திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு பதவியைக் கைப்பற்றினர். இதனால், கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் உள்ள விசிக-வுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், விசிகவைச் சேர்ந்த கிரிஜா திருமாறன் தோல்வியடைந்தார்.
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை திமுகவினரே கைப்பற்றிதால் அதிருப்தி அடைந்த விசிக தலைவர் திருமாவளவன், “முதல்வரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையடுத்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடைய வைத்துள்ளது. குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகி நிற்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன். பொறுப்பை விட்டு விலகிவிட்டு என்னை வந்து சந்தியுங்கள்” என்று தெரிவித்தார். மேலும், “மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இன்னும் பதவி விலக வில்லை.
இந்த சூழ்நிலையில்தான், கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.” என்று அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“