திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் விவகாரத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கள் பெண்கள் மத்தியில் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் கொடியேரி பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிபிஎம்மின் மாநிலச் செயலாளராக கொடியேரி தேர்ந்தெடுக்கப்படுவது இது மூன்றாவது முறை. திருவனந்தபுரத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக இது அறிவிக்கப்பட்டது. அதேநேரம், பினராயி விஜயன் மருமகனும், கேரள சுற்றுலாத் துறை அமைச்சருமான ரியாஸ் மாநில குழு நிர்வாகிகள் பட்டியலில் முதல்முறையாக இடம்பெற்றார்.
இதனிடையே, மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கொடியேரி பாலகிருஷ்ணன் கட்சியில் பெண்களுக்கான பங்கு குறித்து பேசினார். அதில், “ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த சமூகமானது இது. அதன் வெளிப்பாடுகள் பல துறைகளிலும் பிரதிபலிக்கும். அதற்கு எதிராக, இந்த நிலை மாற்றப்பட வேண்டும் எனத் தீர்மானித்து பெண்களுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்கப்படும். சிபிஎம் கட்சியிலும் அதிக பெண்களை மாநிலக் குழுவுக்குக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது.
பாலின சமத்துவத்தை உறுதி செய்து ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” இப்படி பெண்கள் முக்கியவத்துவம் குறித்து கொடியேரி முதலில் பேசினார்.
சிலமணித்துளிகளில் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம், “சிபிஎம் கட்சியின் மாநிலக் குழுவில் பெண்களுக்கு 50 சதவீதப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுமா” என்று கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு அதிர்ச்சியாக பார்ப்பது போல் பார்த்த கொடியேரி, பின்பு கிண்டலாக சிரிப்பது போல் சிரித்து, “கட்சியை அழிக்கும் நோக்கில் இந்த கேள்வியை கேட்கிறீர்களா அல்லது நடைமுறைக்கு ஏற்ற பரிந்துரையா” என்ற கேட்டவர், “மாநிலக் குழுவில் பெண்களுக்கு 50 சதவீதப் பிரதிநிதித்துவம் வழங்குவது நடைமுறைக்கு ஏற்றச் செயல் அல்ல. நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகளை முன்வையுங்கள்” என்று பதில் கொடுத்தார். இந்தப் பதில் தான் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பின் (MSF) தலைவர்களில் ஒருவரான பாத்திமா தஹ்லியா என்பவர், “கொடியேரியின் கருத்து பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. கட்சி கமிட்டிகளில் பெண்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது பொதுவெளியில் பெண்களை அவதூறு செய்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடியேரியின் கருத்துக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். புகார் செய்த சில மணிநேரங்களில் முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவர் பதவியில் இருந்து பாத்திமா நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொடியேரி பாலகிருஷ்ணனின் கருத்துக்களுக்கு எதிராக பெண்கள் மத்தியில் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு எதிராக சிலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேநேரம் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர், “கொடியேரி பாலகிருஷ்ணன் பெண்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடவில்லை. அவர் சொன்ன ஒரு சில வார்த்தைகளை மட்டும் சொல்வது சரியல்ல. அவர் அப்படிச் சொல்லவில்லை. நகைச்சுவைக்காக அப்படி பேசியிருப்பார். அவர் சொன்ன நகைச்சுவையை எடுத்துக்கொண்டு பெண்ணுரிமைக்கு எதிரானது என்று சொல்ல முடியாது. பெண் சமத்துவத்திற்காக சிறப்பாக பாடுபடும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளராக கொடியேரி உள்ளார். பெண்களை ஊக்குவிக்கும் சிறந்த தலைவர் அவர்” என்று கொடியேரிக்கு ஆதரவாக பேசினார்.
கொடியேரி பாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு சில மணிநேரங்கள் முன்பு தான், இதே சிபிஎம் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர் பிந்து உள்ளிட்ட பெண் தலைவர்கள், “பெண்களுக்கு எதிராக கட்சியில் சில தலைவர்களின் நடவடிக்கைகள் மோசமாக உள்ளன. கட்சிக்குள் பாலின சமத்துவமின்மை நிலவி வருகிறது. இது குறித்து புகார்கள் முன்வைத்தும் சரியான ரீதியில் அதை எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். சில பெண்களுக்கு கட்சியில் பிரதிநிதிதத்துவம் கொடுக்கப்பட்டாலும், ஆண்கள் ஆதிக்கமே அதிகம் உள்ளது” என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால், இந்த சர்ச்சை இப்போது கேரளத்தில் வலுத்து வருகிறது.
கேரளத்தை ஆளும் சிபிஎம் கட்சியின் மாநிலக் குழுவில் மொத்தம் 88 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், அந்த மாநிலக் குழுவில் 13 பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.