உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல 3 முறை முயற்சி நடந்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய வாக்னர் மற்றும் செச்சென் எனப்படும் சிறப்புப் படைகளை ரஷ்யா அனுப்பியதாகவும் இதுகுறித்து ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு உக்ரைனை எச்சரித்ததாகவும் அதனால், உஷாரான உக்ரைன் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. கடந்த வாரத்தில் 3 முறை நடந்த கொலை முயற்சிகளில் உக்ரைன் அதிபர் தப்பியுள்ளார்.
ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு கொலை முயற்சி குறித்து தங்களுக்கு முன் கூட்டியே தகவல் கொடுத்ததாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் செயலாளர் ஒலக்சி டனிலோவ் கூறியுள்ளார். உக்ரைன் அதிபரை கொலை செய்ய வந்த படையினர் தலைநகர் கீவ் அருகே உள்ள புறநகர் பகுதியில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் போரை விரும்பாத ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பில் உள்ள சிலர் கொலை முயற்சி பற்றிய தகவலை உக்ரைனிடம் தெரிவித்ததாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.