மாஸ்கோ: ரஷ்யாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தனிநபருக்கு இவ்வளவுதான் என்றளவில் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
போர் சூழலைப் பயன்படுத்தி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலர் பெருமளவில் வாங்கிப் பதுக்கி பின்னர் அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க ரஷ்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னதாக, சில்லறை வியாபாரிகள் அரசிடம் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினர். கடந்த வாரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொள்முதல் வழக்கத்தைவிட பல டன் அதிகமிருந்ததால் ரஷ்ய வர்த்தக தொழில் அமைச்சகத்திற்கு வியாபாரிகள் தகவல் கொடுத்தனர். அத்துடன் இந்தப் பரிந்துரையையும் கூறினர். அவர்களின் இந்தப் பரிந்துரையை ஏற்ற அரசு, உடனடியாக இதனை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களான பிரெட், அரிசி, மாவு, முட்டை, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவகை இறைச்சி, பால் பொருட்கள் ஆகியனவற்றின் விலையை அரசே கட்டுப்படுத்துகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய நடவடிக்கைக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால், ரஷ்ய பொருளாதார சற்றே ஆட்டம் கண்டுள்ளது. ரஷ்ய மத்திய வங்கி, ரூபிள் மதிப்பை பழைய நிலைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 11வது நாளாக நீடித்துவரும் நிலையில், உக்ரைன் இன்னும் சண்டையைத் தொடர்ந்தால் அந்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்திருந்தார்.
ஆனால், உக்ரைனில் கட்டிடங்கள் வீழ்கின்றன, மக்கள் உயிரிழக்கின்றனர். ரஷ்யாவில் பொருளாதாரம் சரிகிறது என்று போர் அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை ரஷ்யா அமல்படுத்தியுள்ளதால் உள்நாட்டு ஊடகங்கள் போர் பற்றிய செய்திகளைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளன.
இந்தச் சட்டம் குறித்து ரஷ்யாவின் நோவயா கஸட்டா செய்தித்தாளின் எடிட்டர் டிமிட்ரி முரடோவ் (கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்களில் ஒருவர்), தங்கள் செய்தித்தாளில் இனி உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை பற்றிய செய்திகள் வராது என்று அறிவித்தார். சென்சார் விதிகள் கடுமையாக இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும் தங்கள் ஊடக இணையதளத்திலிருந்தும் ரஷ்ய நடவடிக்கை தொடர்பான அனைத்து செய்திகளும் நீக்கப்படுகிறது என்றார். ஆனால், ரஷ்யா எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மட்டும் செய்திகள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில், தற்போது ரஷ்யாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பான செய்திகள் உள்ளூர்வாசிகளை அதிரச் செய்துள்ளது.
போரின் தாக்கம் போரை எதிர்கொள்பவருக்கும் நடத்துபவருக்கும் சமமாகவே இருக்கும். இழப்புகள் தான் வெவ்வேறு! ரஷ்யா, உக்ரைன் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையாவது முன்னேற்றம் காணுமா என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.