புதுடெல்லி: சரக்கு போக்குவரத்தில் ரயில் சேவையின் தேவை மிகவும் குறைந்து விட்டது. இதில் சாலை, நீர்வழி போக்குவரத்துகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மண்டலங்களில் உள்ள தாது வளங்கள் நிறைந்த மாவட்டங்களை அடையாளம் கண்டு, அங்கு என்ன தாதுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை சேகரிக்க, அந்தந்த மண்டல வணிக மேம்பாட்டு பிரிவுகளுக்கு ரயில்வே உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், அந்த மண்டலங்களின் சுரங்கங்களுக்கு அருகாமையில் உள்ள ரயில் நிலையங்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்க அறிவுறுத்தினர். இதன்படி, நிலக்கரி, இரும்பு தாது, பாக்சிட் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் எடுக்கப்படும் 52 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தின்சுக்கியா 0.62, ராய்கன்ஜ் 17, கோர்பா 111, தாண்டேவாடா 23 மெட்ரிக் டன் தாது பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சுரங்கங்களின் அருகே வழித்தடம் ஏற்படுத்துவதின் மூலம், இந்த கனிம பொருட்களை சரக்கு ரயில்களில் அதிகளவில் ஏற்றிச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களை சிறப்பு வழித்தடத்தின் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.