தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன்காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM