உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு எடுத்த முயற்சியால் 35 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பிப். 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கிய உடன் மாணவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு அவர்களின் தரவுகளை சேகரிக்கத் துவங்கியது.
அதேவேளையில், தாக்குதல் தீவிரமடைந்ததால் மாணவர்களை மீட்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர்கள் தாமாக அங்கிருந்து நடந்தாவது வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தனது முயற்சியைக் கைவிடாத தமிழக அரசு தமிழ் நாட்டு மாணவர்களை மீட்க தேவையான செலவை அரசே ஏற்க முடிவெடுத்தது.
கார்கிவ் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் மாணவர் டாக்டர் விஜயகுமார் என்பவரது ஆலோசனையின் பெயரில் கார்கிவ் நகரின் புறநகரான பிசோச்சின்னில் சிக்கியிருந்த 35 தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பிசோச்சின் நகரில் உள்ள பயண ஏற்பாட்டாளருடன் தொடர்பு கொண்ட டாக்டர் விஜயகுமாரிடம் மாணவர் ஒருவருக்கு சுமார் ரூ. 38000 வழங்கினால் அவர்களை பேருந்தில் எல்லைக்கு அருகில் கொண்டு விடுவதாக கூறியுள்ளனர்.
இந்த தகவலை அடுத்து 35 மாணவர்களை மீட்க மொத்தம் ரூ. 13.40 லட்ச ரூபாயை இங்கிருந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் அந்த பயண ஏற்பாட்டாளரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள் 35 பேரும் பிப். 4 ம் தேதி வெள்ளி அன்று இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக போல்டவ நகரில் அன்றிரவு தங்கவைக்கப்பட்ட மாணவர்கள் பின்னர் நேற்று ரோமானியா எல்லையை நோக்கி பயணமானார்கள்.
இதுகுறித்து தமிழ் நாடு அரசு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நடவடிக்கை மத்திய அரசின் கூடுதல் முயற்சி என்று தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 35 மாணவர்களைத் தவிர சில இந்திய மாணவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது இவர்களின் பயணத்திற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா அல்லது அந்த மாணவர்களின் சொந்த செலவில் வந்தார்களா என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழக அரசின் செலவில் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கார்கிவ் பகுதியில் இருந்து 35 மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில், பேருந்தில் ஏறிய மாணவர்கள் “இதற்கு மேலும் நாங்கள் இங்கு இருந்தால் உயிர் பிழைத்திருக்க மாட்டோம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.