கீவ்: உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்குமாறு இன்றும் (மார்ச் 6) அந்நாட்டு அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய நடவடிக்கையின் 11வது நாளான இன்று, ஓடேஸா துறைமுக நகரைக் குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேற மனிதாபமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது. நேற்று முதன்முறையாக ஹியூமன் காரிடர் அமைக்க போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்த ரஷ்யா அதை சிறிது நேரத்திலேயே வாபஸ் பெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது முறையாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இன்றும் ரஷ்ய படைகள் நடைமுறையில் எந்தத் தளர்வும் அறிவிக்கவில்லை. இதனால், 4.5 லட்சம் மக்களோடு மரியுபோல் சுற்றிவளைக்கப்பட்டு முடங்கியுள்ளது. இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
விமான நிலையம் அழிப்பு: இதற்கிடையில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான சிவில் போக்குவரத்துக்கான வின்ட்ஸியா விமான நிலையத்தை ரஷ்யப் படைகள் முற்றிலுமாக தாக்கியுள்ளன. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “சிவில் போக்குவரத்துக்கான வின்ட்ஸியா விமான நிலையத்தை ரஷ்யப் படைகள் முற்றிலுமாக தகர்த்துள்ளன. ஏவுகணைத் தாக்குதலில் விமான நிலையம் சேதமடைந்துள்ளது. இதனால் தான் நாங்கள் மீண்டும் மீண்டும் மேற்கத்திய சக்திகள் உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்கிறோம். ரஷ்ய விமானங்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், ரஷ்ய பயங்கரவாதிகள் அணுக முடியாமல் உக்ரைன் வான்வழியை நோ ஃப்ளை ஜோனாக அறிவியுங்கள்” என்று கெஞ்சாத குறையாகக் கோரியுள்ளார்.
ஆனால், நேற்றே நேட்டோ தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டது. “உக்ரைனின் நிலைமையை எங்களால் உணர முடிகிறது. ஆனால், உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவித்தால் நாங்கள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதல் நடத்த நேரிடும். இது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் போரில் ஆழ்த்தும். பெருந்துயரத்துக்கு வழிவகுக்கும். உக்ரைனுக்கு ராணுவப் படைகளை அனுப்புவதில்லை, நோ ஃப்ளை ஜோனாக அறிவிப்பதில்லை இல்லை என்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஒற்றுமையாக இருக்கின்றன. எங்களின் இலக்கு அமைப்பில் உள்ள 30 நாடுகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே” என்று நேட்டோ பொதுச் செயலாளர் நேற்று கூறியிருந்தார்.
அதையும் மீறி இன்று ஜெலன்ஸ்கி தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நோ ஃப்ளை ஜோன் என்று ஒரு பகுதியை அறிவித்தால் அந்த வான்வழிப் பரப்பில் போர் விமானங்கள், ட்ரோன்கள், பயணிகள் விமானம் என எதுவுமே பறக்கக் கூடாது. போர்ப்பதற்றக் காலங்களில் ஒரு பகுதி நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்கப்பட்டால் அந்த வான் எல்லைக்குள் பறக்க முற்படும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படலாம். நேட்டோ இப்படி உக்ரைனை அறிவித்தால் போர்க்களத்தில் நேரடியாக நேட்டோ படைகள் களமிறங்கும். இதுதான் உக்ரைனின் எதிர்பார்பு.
போப் பிரான்சிஸ் கண்டனம்: இதற்கிடையில் போப் பிரான்ஸிஸ், ரஷ்யா இனியும் தனது தாக்குதலை ராணுவ நடவடிக்கை என்று கூற வேண்டாம். இது போர் தான். போரால் மனித உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தெருக்களில் ரத்த ஆறு ஓடுகின்றது என்று கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
புதின் திட்டவட்டம்: ஆனால், ரஷ்ய அதிபர் புதினோ, உக்ரைன் தனது பதில் தாக்குதலை நிறுத்தும்வரை, மாஸ்கோவின் வேண்டுகோள்களுக்கு இணங்கும் வரை தாக்குதல் தொடரும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.