தீகவாப்பி மஹா தூபியின் அரைக்கோளக் குவிமாடத்தில் புனித சின்னங்கள் வைக்கும் நிகழ்வு அம்பாறை தீகவாப்பிய ரஜமஹா விஹாரை வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இன்று (மார்ச், 06) இடம்பெற்றது.
ஶ்ரீ சம்போதி விஹாரையின் முன்னாள் விஹாரதிபதி காலஞ்சென்ற வண. தரணாகம குசலதம்ம தேரரின் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூபியின் ‘சூடா மாணிக்கம்’ ஏந்திய வாகண பவனி கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து தீகவாப்பிய வளாகத்தை வந்தடைந்தது.
இதற்கமைய, தீகவாப்பி வளாகத்தில் இன்று காலை சிறப்பு பூஜைகள், சமய சடங்குகள் புனித வஸ்துக்களுக்கு நடத்தப்பட்டதுடன் தம்ம சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் குணரத்ன, “இன்று மகா தூபியின் எண்கோண மூலைகளில் தங்க கலசங்களில் வைக்கப்பட்டுள்ள எட்டு புனித நினைவுச் சின்னங்கள் பிரதிஷ்டை செய்துள்ளோம்” என்றார்.
மேலும், “தூபியை புனரமைப்பது மட்டுமல்லாமல் புனிதமான ரஜமஹா விஹாரை வளாகத்தில் ‘யாத்ரீகர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் ‘அன்னதான மண்டபம்’ ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பக்தர்களுக்காக “நாகலிங்கம், கொன்றை மற்றும் நாக மரக் கன்றுகளுடன் கூடிய அழகான சுற்றுப்புறச்சூழலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் வணக்கத்துக்குரிய அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், அம்பாறை அரசாங்க அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இராணுவ அதிகாரிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், பிராந்திய அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.