புதுடெல்லி: என்எஸ்இ என்று அழைக்கப்படும் தேசிய பங்கு சந்தையின் தலைவராக பணியாற்றியவர் சித்ரா ராமாகிருஷ்ணன். இவர் தனது பதவி காலத்தில் முறைகேடுகள் செய்ததாகவும், இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்கு சந்தை ரகசியங்களை பகிர்ந்து, அவர் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மாதம் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணனால் சாமியார் உத்தரவுப்படி தேசிய பங்கு சந்ைதயின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஆனந்த சுப்ரமணியனை சிபிஐ சமீபத்தில் கைது செய்தது. இதனால், தன்னையும் கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி சஞ்ஜீவ் அகர்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால், சித்ரா ராமகிருஷ்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.