பீஜிங்:
சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான கியான்சினானின், ஷென்பெங் கவுண்டியில் உள்ள சான்ஹே ஷன்ஜன் நிலக்கரி சுரங்கம், கடந்த மாதம் 25ம் தேதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்ததால் உள்ளே பணியாற்றிய 14 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், எந்த பகுதியில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.
தீவிர முயற்சிக்கு பிறகு இன்று மதியம் சுரங்கத்தில் இருந்து 14 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து மீட்புப் பணி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
சீனாவில் சுரங்க விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உயிரிழப்பு குறைந்துள்ளது. 2020ம் ஆண்டில் 2 சுரங்கங்கள் இடிந்து விழுந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சுரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷான்டாங் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.