கட்டுரையாளர்: த. வளவன்
தமிழகத்திலேயே அதிக திருப்பங்களுடன் நடந்த தேர்தல்களில் நெல்லை மேயர் தேர்வு முக்கியமானது. எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு ஆள்கடத்தல், ரிசார்ட் அனுபவங்கள் என பல்வேறு கட்டங்களை தாண்டி மேயர், துணை மேயர் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டிகளுக்கு மத்தியில் மேயர், துணை மேயர் பதவிகளை இதுவரை தீவிர அரசியலில் அனுபவம் இல்லாத, இரு புதுமுகங்கள் மீது நம்பிக்கை வைத்து பதவிகளையும் கொடுத்து கவுரவப் படுத்தியுள்ளது திமுக தலைமை.
திருநெல்வேலி மாநகராட்சியில் 2 முறை திமுகவும் 3 முறை அதிமுகவும் மேயர் இருக்கையை அலங்கரித்துள்ளன. தற்போது ஆறாவது முறையாக நடைபெற்ற தேர்தல் முடிவில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 55 வார்டுகளில் 47 வார்டுகளில் போட்டியிட்ட திமுக 43 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை ஒருவரும் திமுக அபிமானி என்பதால் திமுகவின் பலம் 44 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திமுகவின் வெற்றி எளிதானது.
16 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியிருக்கும் நெல்லை மேயர் இருக்கையை முன்னாள் அதிமுக துணை மேயரும் தற்போது கவுன்சிலர் தேர்தலில் தனது செல்வாக்கால் எளிதாக வென்றவருமான ஜெகநாதன், மற்றும் சில செல்வாக்கான திமுக கவுன்சிலர்கள் தமது பணபலம் மூலம் மேயராக முயற்சிப்பதாக திமுக மத்திய மாவட்ட செயலாளர் வகாப்புக்கு தெரிய வர மனிதர் அலர்ட் ஆகி விட்டார்.
சில செல்வாக்கான கவுன்சிலர்களை தவிர 35 கவுன்சிலர்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்த வகாப் அவர்களை கன்னியாகுமரி ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்தார். அதிலும் திருப்தியடையாத வகாப் ஒரு கட்டத்தில் கேரளாவில் மிக பிரபலமான பூவார் ரிசார்ட்டில் தங்க வைத்து பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்து வந்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அப்படியே அவர்களை பேக் செய்தவர் மறுபடியும் மேயர் தேர்தல் அன்று தான் நெல்லைக்கு அழைத்து வந்தார். வகாப் செய்த இந்த அரசியல் வியூகம் அவருக்கும் திமுகவுக்கும் விசுவாசமான மேயரை பெற்றுத்தந்ததாக சொல்கின்றனர் திமுகவினர்.
மேயர் பதவிக்கு திமுக சார்பில் வார்டு 16-ஐச் சேர்ந்த 46 வயதான பி.எம்.சரவணனும், துணை மேயர் பதவிக்கு வார்டு 1-ஐச் சேர்ந்த 46 வயதான கே.ஆர்.ராஜுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பதவிகளுக்கு திமுக மேலிடம் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த சரவணனும், யாதவ சமூகத்தைச் சேர்ந்த ராஜுவும் மாவட்ட செயலாளர் பரிந்துரைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரும் நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான சரவணன், 16 ம் வார்டில் அதிமுக வேட்பாளரை 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வார்டில் செல்வாக்கான இவர் பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பிள்ளை சமூகத்தை சேர்ந்த முன்னாள் மேயர்கள் விஜிலா சத்யானந்த் மற்றும் புவனேஸ்வரி இருவரும் தீவிர களப்பணி செய்தனர். இது தவிர இவரது முக்கிய பிளஸ் பாயிண்ட் மாவட்ட செயலாளர் வகாப்பின் செல்லப் பிள்ளை என்பதே.
நெல்லை மாநகராட்சி முதல் வார்டில் பதிவான 3,779 வாக்குகளில் 3,027 வாக்குகளைப் பெற்ற ராஜு, திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருப்பவர். தாழையூத்து, எட்டயபுரம், ஆலங்குளம், சாத்தான்குளத்தில் கல்குவாரிகள் வைத்துள்ள செல்வந்தர். இவருக்கு சொந்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சோலார் பவர் யூனிட் உள்ளது. திமுக குடும்பத்தில்’ இருந்து வந்த திரு.ராஜுவின் தந்தை எஸ்.கிருஷ்ணன் 1973 முதல் 1978 வரை நாரணம்மாள்புரம் டவுன் பஞ்சாயத்து திமுக கவுன்சிலராகவும், இவரது தந்தை கிருஷ்ணனின் தம்பி எஸ்.முருகேசன் 1996 முதல் 2001 வரை இந்த நகர பஞ்சாயத்து தலைவராகவும் இருந்திருக்கிறார்.இவர் நெல்லை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ராஜ கண்ணப்பனின் உறவினர் என்பது இவரது பிளஸ் பாயிண்ட்.
மேயர், துணை மேயர் தேர்வு முடிவடைந்தாலும் இன்னும் 4 மண்டல தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான தலைவர் பதவிகள் காலியாக இருப்பதால் இன்னும் டென்ஷனில் இருக்கிறது நெல்லை மாநகராட்சி. மேயர் தேர்வில் இடம் கிடைக்காதவர்களுக்கு இந்தப் பதவிகள் நிச்சயம் என திமுக தலைமை உறுதியளித்திருப்பதால் அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ஏற்கனவே அதிகாரத்தை ருசித்த சில ஆதிக்க கவுன்சிலர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“