2022-ல் இந்தியாவில் தங்களுடைய முதல் வெளியீடாக 9RT மொபைலை வெளியிட்டது ஒன்ப்ளஸ். ஆனால், அதே நேரத்தில் சீனாவில் ஒன்ப்ளஸ் 10 சீரிஸ் மொபைல்களே விற்பனைக்கு வந்துவிட்டன. ‘இப்போதுதான் 9RT-யே இந்தியாவில் வெளியாகியிருக்கிறது, 10 சீரிஸ் வெளியாக இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ’ என இந்திய ஒன்ப்ளஸ ரசிகர்கள் சலித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒன்ப்ளஸின் சிஇஓ-வான பீட் லௌ, அந்நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் ஒன்ப்ளஸின் செயல்பாடுகள் மற்றும் வரும் காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஒன்ப்ளஸின் வருகிறது என்பது குறித்த அப்டேட்களை பதிவு செய்திருக்கிறார்.
கடந்த 2021 தான் ஒன்ப்ளஸிற்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 11 மில்லியன் மொபைல்களை உலகம் முழுவதும் விற்பனை செய்திருக்கிறது ஒன்பளஸ். அதோடு 10 மில்லியன் ஒன்ப்ளஸ் நார்டு மொபைல்களையும் கடந்த 2021-ல் மட்டும் விற்பனை செய்திருக்கிறது. இந்த மைல்கல்லை முதல் முறையாக ஒன்ப்ளஸ் தொட்டிருக்கிறது என அதன் வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார் பீட் லௌ.
விரைவில் விற்பனைக்கு வருகிறது ஒன்ப்ளஸ் 10 ப்ரோ:
ஒன்ப்ளஸ் மொபைல்களிலேயே விரைவாக விற்றுத் தீர்ந்த மொபைல் ஒன்ப்ளஸ் 10 ப்ரோ தான். விற்பனை தொடங்கிய ஒரு நொடியில் 100 மில்லியன் சீன யெனுக்கு ஒன்ப்ளஸ் 10 ப்ரோ மொபைல்பகள் விற்பனையாகிவிட்டது என ஒன்ப்ளஸ் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பீட். ஒன்ப்ளஸ் 10 ப்ரோவுக்குக் கிடைத்த இந்த வரவேற்பையடுத்து உலகின் மற்ற சந்தைகளிலும் தங்களுடைய புதிய மொபைலை விரைவிலேயே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இந்த மாத இறுதிக்கள் ஒன்ப்ளஸ் 10 ப்ரோவின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.
150W பாஸ்ட் சார்ஜிங்:
சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்த MWC-ல் 150W பாஸ்ட் சார்ஜை அறிமுகம் செய்தது ஓப்போ. இந்த புதிய சார்ஜரை விரைவில் ஒன்ப்ளஸ் மொபைலுடன் வெளியிடும் வாய்ப்பிருப்பதாகவும் அப்போது தெரிவிக்தப்பட்டிருந்தது. தற்போது அதனை தங்களுடைய வலைப்பதிவின் மூலம் உறுதி செய்திருக்கிறார் பீட். இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 150W பாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய மொபைலை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். இந்த சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது 4,500 mAh அளவுள்ள ஒரு பேட்டரியை 5 நிமிடத்தில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்து விட முடியுமாம்.
யுனிஃபைடு ஓஎஸ் இல்லை, இனி ஆக்ஸிஜன் ஓஎஸ் தான்:
ஐந்து மாதங்களுக்கு முன்பு ஓப்போவின் கலர் ஓஎஸ்ஸூடன், தங்களுடைய தனித்துவமான ஆக்ஸிஜன் ஓஎஸ்ஸை இணைத்து ஒரே ஓஎஸ்ஸாக உருவாக்கவிருப்பதாக அறிவித்தது ஒன்ப்ளஸ். ஓப்போ மற்றும் ஒன்ப்ளஸ் ஆகிய இரு நிறுவனங்களின் மொபைல்களிலும் இந்த புதிய ஓஎஸ்ஸே பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது அந்த முடிவைக் கைவிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ்.
கலர் ஓஎஸ்ஸூடன், ஆக்ஸிஜனி ஓஎஸ்ஸை இணைப்பதை ஒன்ப்ளஸ் ரசிகர்கள் பலரும் விரும்பவில்லை. வாடிக்கையாளர்கள் ஒன்ப்ளஸ்ஸைத் தேர்ந்தெடுப்பதற்கு அதன் தனித்துவமான ஆக்ஸிஜன் ஓஎஸ்ஸும் ஒரு காரணமாக இருந்தது. இது குறித்து வாடிக்கையாளர்கள் பல தளங்களிலும் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார்கள். எனவே வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கலர் ஓஎஸ்ஸூடன் ஒன்றினைவதை கைவிடுவதாகத் அந்த வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார் பீட்.
இந்தியாவில் புதிய விற்பனை அனுபவம்:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இணைந்த புதுவிதமான விற்பனை அனுபவத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவிருக்கிறது ஒன்ப்ளஸ். இந்த புதிய முறையின் மூலம், ஆன்லைனில் ஒன்ப்ளஸ் பொருளை ஆர்டர் செய்துவிட்டு, உடனடியாக அருகில் இருக்கும் ஒன்ப்ளஸ் ஸ்டோருக்குச் சென்று அந்தப் பொருளை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது ஒன்ப்ளஸ். இந்த முறையில் எப்படி ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யவிருக்கிறது. ஒன்ப்ளஸ் தளத்தில் கட்டளை செய்தால் மட்டும் தான், இந்த புதிய முறையைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.